Saturday, September 19, 2009

அண்ணா நடத்திய மாநாடு

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு அண்ணா முதல்வராக இருந்தபோது 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பத்தாம் தேதிவரை சென்னையில் ஒரு வாரம் நடந்தது . பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஐநூறு தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒன்பது அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் முப்பத்தாறு குழுக்களாக அறிஞர்கள் பங்கேற்றுப் பல்வேறுத் தலைப்புகளில் கட்டுரைகளைச் சமர்ப்பித்து விவாதித்தனர். தமிழ் அமர்வு ஒன்று மு. வ தலைமையில் நடைபெற்றது. மற்றவை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடந்தன.
பொதுமக்கள் பங்கேற்கும் விதமாக விழாவும் நடத்தப்பட்டது. அதை அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் துவக்கி வைத்தார் . சென்னை மெரீனா கடற்கரையில் நாம் இப்போது பார்க்கிற தமிழ் அறிஞர் சிலைகள் அப்போது வைக்கப்பட்டவைதான் . பத்துத் தமிழ் அறிஞர்களின் சிலைகள் அப்போது நிறுவப்பட்டன.
அண்ணா முதல்வராக இருந்தாலும் அந்த மாநாடு சிறப்புற நடப்பதற்கு உழைத்தவர் இன்றைய முதல்வர் கலைஞர்தான். ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முன்வந்திருப்பது பாராட்டத் தக்கதாகும்.

IATR என்ன செய்கிறது?

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தவேண்டுமென்றால் அதற்கென இருக்கும் IATR அமைப்புடன் இணைந்து திட்டமிடவேண்டும். அதன் தலைவர் பொறுப்பில் முன்பு நொபுரு கரஷிமா இருந்தார். துணைத் தலைவராக பிரான்சுவா குரோ இருந்தார். இப்போதும் அவர்கள்தான் இருக்கிறார்களா? நானும் இன்று பல நண்பர்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன் . எவருக்கும் தெரியவில்லை. அந்த அமைப்பு என்ன செய்கிறது? யாருக்காவது தெரியுமா?

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு

தமிழக அரசு ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை 2010 ஜனவரி மாதம் 21 முதல் 24 வரை நடத்துவது என முடிவு செய்துள்ளது. உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத் தக்கதே . இதற்காக முதல்வர் கலைஞரைப் பாராட்டத்தான் வேண்டும் . மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிக் குழுவில் எண்பேராய உறுப்பினராக என்னையும் தமிழக அரசு நியமித்தது . அதற்கு நன்றி சொல்லச் சென்றபோது, உலகத் தமிழ் மாநாட்டை நடத்தலாம் என்ற வேண்டுகோளை முதல்வரிடம் முன்வைத்தேன் . தமிழுக்குக் கிடைத்துள்ள செம்மொழி அங்கீகாரத்தை கொண்டாடுவதாகவும், மேற்கொண்டு நாம் செய்யவேண்டிய பணிகளைத் திட்டமிடுவதாகவும் அந்த மாநாட்டை நடத்தலாம் என நான் சொன்னபோது " என்ன வேலை செய்வது என்பதை மாநாடு போட்டு முடிவு செய்வதைவிடவும் ஏதாவது சிலவற்றைச் செய்துவிட்டுப் பிறகு மாநாடு போடலாம்" என முதல்வர் அவர்கள் சொன்னார்கள். அதை அங்கிருந்த கவிஞர் வைரமுத்து முதலானவர்களும் ஆமோதித்தனர். இப்போது எனது கோரிக்கை நிறைவேறியிருக்கிறது . அதை எண்ணி மகிழ்கிறேன்.

உலக அளவில் தமிழினம் இந்த அளவுக்கு வேறெப்போதும் பலவீனப்பட்டுப் போயிருக்காது என்று கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது. ஈழத் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகின்றனர். இலங்கையில் மட்டுமின்றி தமிழ்கத்திலும் சுமார் ஒரு லட்சம் பேர் முகாம்களில் வாடுகின்றனர். இனி தமிழர் எனச் சொல்லிக்கொள்வதுகூட குற்றமாக வர்ணிக்கப்படலாம் என்ற நிலை. அப்படியானதொரு சூழலில் இந்த மாநாடு நடக்கவுள்ளது.

தமிழினத்தின் நிலை இதுவென்றால் தமிழகத்தின் நிலையோ இன்னும் மோசம். தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்ற கோரிக்கை நாற்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் இன்றைய இளைய தலைமுறை அறிந்திருக்கவில்லை. இந்த மாநாடு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.


இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை மட்டுமே போதாது. தமிழர் ஒவ்வொருவரும் இதில் பங்களிப்புச் செய்யவேண்டும் . அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ . நான் தினமும் இதில் எனது கருத்துகளையும் வேறு பலரது எண்ணங்களையும் பதிவு செய்யவிருக்கிறேன். கடந்த மாநாடுகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் சிலவும் இதில் இடம்பெறும். இப்போது நடக்கவிருக்கும் ஒன்பதாவது மாநாடு பயனுள்ளதாய் அமைய என்னென்ன செய்யலாம் என்பதையும் நாம் இங்கே விவாதிக்கலாம்.
மொழியைக் கொண்டாடுவோம் . மொழியை வளர்ப்போம்.